News
கொரோனா வைரசுக்கு நெதர்லாந்தில் முதல் பலி
நெதர்லாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முதல் பலியாக 86 வயது முதியவர் இன்று உயிரிழந்துள்ளார்.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது.
சீனா, ஈரான், பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட உலகின் 80-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு 3 ஆயிரத்து 385 பேர் உயிரிழந்துள்ளனர். 98 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரசுக்கு 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஐரோப்பாவில் உள்ள நெதர்லாந்து நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு முதல் பலியாக ரோட்டர்டாம் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 86 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இதனால் அந்நாட்டு மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
இதற்கிடையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஈரானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. மேலும், செர்பியா, கேமரூன் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.